இந்தியாவில் கரோனா பாதிப்பு நேற்றை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, இந்தியாவில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32,498ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,723ஆக உள்ளது.
நோய் தொற்று பரவும் தன்மையைக் குறிப்பிடும் தினசரி பாசிட்டிவிட்டி சதவீதம் 2.13% ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதை இது குறிக்கிறது. கடந்த 48 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது. நாட்டின் அதிக பாதிப்புகளைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
அந்த மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,701 ஆக பதிவாகியுள்ளது. இதில் மும்பை நகரத்தில் 1,242 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 195 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலான பாதிப்பு சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவற்றில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கரோனா நான்காம் அலை ஏற்பட்டுள்ளதாக அச்சம் நிலவி வருகிறது. இதனால் அனைவரும் பொதுவெளியில் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தவ்தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.