வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்ந்துள்ளதன் மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது
இது தொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், " உக்ரைன் போர் காரணமாக, உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தி யுள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்றும், அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் எனவும், நடப்பு நிதியாண்டில் முதல் 3 காலாண்டுகளில் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.