தங்கக்கடத்தலில் பினராயி விஜயனுக்கும் தொடர்பு - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் ஸ்வப்னா!

By காமதேனு

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு காட்டமாக பதில் அளித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி மற்றும் மகளுக்குத் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தாம் கூறியதாக இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய ஸ்வப்னா சுரேஷ், "2016-ல் முதல்வர் துபாயில் இருந்தபோது சிவசங்கர் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது நான் துணைத் தூதரகத்தில் செயலாளராக இருந்தேன். துபாய்க்கு உடனடியாக டெலிவரி செய்ய வேண்டிய ஒரு பையை முதல்வர் மறந்துவிட்டதாக சிவசங்கர் என்னிடம் கூறினார். தூதரக அதிகாரி மூலம் பையை கொண்டு வந்தபோது, ​​அதில் கரன்சி இருப்பதை உணர்ந்தோம். அதுபோல தூதரகத்தின் வாகனத்தில் கன்சல் ஜெனரலின் வீட்டிலிருந்து முதல்வரின் அதிகாரபூர்வ வீடு வரை அதிக எடை கொண்ட பிரியாணி பாத்திரங்களை நாங்கள் டெலிவரி செய்துள்ளோம். இது பிரியாணி மட்டுமல்ல, அதில் ஏதோ உலோகப் பொருட்கள் இருந்தது” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்

பினராயி விஜயன்

ஆனால், இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “குற்றம் சாட்டப்பட்டவர்களின் இந்தக் கருத்துகள் அரசியல் அஜெண்டாவின் ஒரு பகுதி. பொதுமக்கள் ஏற்கெனவே இந்த அஜெண்டாவை நிராகரித்துள்ளனர். ஒரு இடைவெளிக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை வைத்து அதே அஜெண்டாவை மீண்டும் செய்ய வைக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டில் ஒரு துளி கூட உண்மை இல்லை. இந்தப் பொய்களைப் பரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் உறுதியையும், அரசியல் தலைமையின் உறுதியையும் அழித்துவிட முடியும் என்று நீங்கள் நினைத்தால், இது வீண் செயல்பாடு என்பதை நினைவூட்டுகின்றேன்” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE