சமாளிக்கவே முடியாத சமையல் எரிவாயு விலை: தொடரும் சவால்கள்!

By ஆர்.என்.சர்மா

உலகச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வு, பொதுவான பணவீக்க விகித அதிகரிப்பு, உக்ரைன் போர் ஆகியவற்றால் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு, விலையுயர்வு ஆகிய இரண்டும் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன.

மத்திய அரசு மானியச் செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை சர்வதேச சந்தையில் மாறும்போதெல்லாம் அதை அன்றாட விற்பனை விலையிலும் எதிரொலிக்கச் செய்து அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் இழப்பைக் கட்டுப்படுத்துகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை இரட்டிப்பாகிவிட்டிருக்கிறது. சமையல் எரிவாயு விலை கடந்த நவம்பருக்குப் பிறகு 40 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கான குடும்பங்கள் சமையல் எரிவாயு விலை உயர்வை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.

2020 டிசம்பருக்குப் பிறகு வீடுகளுக்கு அளிக்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை மட்டும் 225 ரூபாய் உயர்ந்திருக்கிறது. 594 ரூபாய் முதல் 819 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. வெறும் சந்தை விலை மாறுதலால் மட்டும் விலை உயர்ந்துவிடவில்லை. மத்திய அரசுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்கிறது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களுக்கு சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை, பெருந்தொற்றுக் காலத்தில் அரசு தற்காலிகமாக நிறுத்தியும் வைத்தது.

சமையல் எரிவாயுவுக்கான மானிய ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தாலும் அது கடந்த ஆண்டு ஒதுக்கிய அளவைவிடக் குறைவு. 2019-20-ல் 35,605 கோடி ரூபாயாக இருந்தது, 2020-21-ல் 25,520 கோடி ரூபாயானது. 2021-22-ல் 12,480 கோடி ரூபாய்தான் மானியமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அரசு இப்படி மானியத்தைக் குறைத்து விலை அதிகரிப்புக்குக் காரணமாகிவிட்டதால் கோடிக்கணக்கான குடும்பங்கள் சமையல் கேஸ் அடுப்பை பரணில் வைத்துவிட்டு பழையபடி விறகு, கோதுமைத்தாள் அடிக்கட்டை, நிலக்கரி, வேலிகாத்தான் முள்விறகு, கரும்புச் சக்கை ஆகியவற்றை வைத்து சமையல் செய்யத் தொடங்கிவிட்டன. இவை உடல் நலத்துக்குக் கேடு என்று அரசே முன்னர் பிரச்சாரம் செய்தது. அரசின் மானியக் குறைப்பால் தங்களுடைய சுகாதாரம் கெட்டாலும் பரவாயில்லை என்று மக்கள் பழைய எரிபொருட்களுக்கே போய்விட்டார்கள்.

நகரங்களில் இருப்பவர்களுக்கு இந்த மாற்று வசதியும் கிடையாது. பெரிய நகரங்களில் இப்போது விறகு தொட்டியும் கிடையாது, நிலக்கரி விற்பனைக் கடைகளும் கிடையாது. நகை வியாபாரிகள் போன்ற சிலருக்கு மட்டுமே தெரிந்த சில விற்பனையாளர்கள்தான் கரி விற்கின்றனர். நகர்ப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் அடுப்பு வைத்து சமைக்க ஏற்றதாக சமையலறைகள் இல்லை. சொந்த வீட்டுக்காரர்களே புகை போக்கிகளை வைக்கவில்லை. நவீன அடுப்புகளுக்கு நவநாகரீக சிம்னிகள்தான் விற்கப்படுகின்றன. அந்த மேட்டுக் குடிகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

ஏழைகளுக்கு முன்னர் மண்ணெண்ணெய் ஸ்டவ் கை கொடுத்தது. இப்போது அவையும் புழக்கத்தில் குறைந்துவிட்டன. தள்ளு வண்டிகளில் டிபன் கடை நடத்துகிறவர்கள் மக்காச்சோளம், நிலக்கடலை போன்றவற்றை அவித்து விற்பவர்கள்தான் ஸ்டவ் பயன்படுத்துகின்றனர். கேஸ் ஸ்டவ்கள் பற்றிய விளம்பரங்களைக்கூட இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை.

உத்தர பிரதேசத்தின் கவுதம் புத்தர் நகரில் கடந்த ஒன்பது மாதங்களாக சமையல் எரிவாயுவுக்கான மானியம்கூட தரப்படவில்லை என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி எத்தனை இடங்களோ? ஆனால் அதிகாரிகளோ மானியம் நிறுத்தப்படவில்லை என்றே வாதிடுகின்றனர்.

மோடி அரசு பெருமைப்பட்டுக்கொண்ட திட்டம் உஜ்வலா. அதன்படி வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புக்குக் கட்டணம் ஏதுமில்லாமல், இலவசமாக இணைப்பு தந்து ஒரு சிலிண்டரை விலைக்கு அரசு வழங்கியது. அந்த சிலிண்டர்களுக்குத்தான் இப்போது 200 ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2016-ல் தொடங்கப்பட்ட உஜ்வலா திட்டம் ஏழைகளுக்கு நம்பிக்கை தரும் திட்டமாக இருந்தது. உத்தர பிரதேச தேர்தலில் யோகி மீண்டும் பதவிக்கு வர இது முக்கியப் பங்கு வகித்தது. முதல் சிலிண்டருக்கு ரொக்க மானியமும் ஸ்டவ் வாங்க கடனும் தரப்பட்டதால், தகுதி உள்ளவர்கள் என்று அரசால் அடையாளம் காணப்பட்ட அனைவரும் உஜ்வலா திட்டத்தில் சேர்ந்துவிட்டனர். இதற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பைப் பார்த்த அரசு மேலும் ஒரு கோடிப் பேருக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தது. அந்தமான்-நிகோபார் தீவுகள், அதிக உயரமான – எவராலும் எளிதில் நெருங்க முடியாத மலைப்பகுதிகள், பாலைவனங்களின் உள்பகுதிகள் ஆகிய இடங்களில் வாழ்வோருக்கும் இந்தத் திட்டம் கொண்டுசெல்லப்படும் என்று அறிவித்தது.

பெருந்தொற்றுக் காலத்தில் பொதுமுடக்கம் காரணமாக வீட்டோடு இருந்த மக்களுக்கு இந்தச் சமையல் சிலிண்டர்கள் விலையில்லாமல் தரப்பட்டன என்பதும் உண்மையே. அதற்காகக் கடுமையான பொருளாதாரச் சவால்களை மக்கள் எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது மக்களை மேலும் துயரில் ஆழ்த்தும் நடவடிக்கையாகும். இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து விலையைக் குறைக்க வேண்டும்.

உஜ்வலா திட்டத்தில் பயன் அடைந்தவர்கள் மீண்டும் விறகு அடுப்புகளுக்கு மாறினால் லட்சக்கணக்கான மகளிருக்கு நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா, காசநோய் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பாகிவிடும். சுற்றுச்சூழலிலும் காற்று மாசு அதிகரிக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதற்குச் செய்யும் செலவை வீண் விரயமாகக் கருதாமல் மானியத்தை அதிகப்படுத்தி நிரந்தரமாக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE