‘நேரில் ஆஜராக வேண்டும்’ - நுபுர் ஷர்மாவுக்கு மகாராஷ்டிர போலீஸ் சம்மன்!

By காமதேனு

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு மகாராஷ்டிர காவல் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. அவருக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வழக்கு தொடர்பான விவரங்கள் அடங்கிய சம்மன், மின்னஞ்சலிலும், விரைவு அஞ்சலிலும் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தானே மாவட்டத்தின் மும்ப்ரா காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஜூன் 22-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் நடந்துவரும் மத ரீதியிலான மோதல் குறித்து கடந்த வாரம் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது அவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. அவரது சர்ச்சைக் கருத்துக்கு கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத்தீவு, இந்தோனேசியா, லிபியா, ஜோர்டான், துருக்கி, பஹ்ரைன், ஈரான், இராக் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இதற்கிடையே, இது தொடர்பான வழக்கில் மும்பை காவல் நிலையத்திலும் அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு மும்பையின் பைதோனி காவல் நிலையத்தில் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இதுதொடர்பாக அவரது வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்படும் என மும்பை காவல் துறை ஆணையர் சஞ்சய் பாண்டே நேற்று தெரிவித்திருந்தார்.

கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதற்காக மன்னிப்பு கோரினார். எனினும், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், நபிகள் நாயகம் குறித்து ட்விட்டரில் அவதூறாகக் கருத்து தெரிவித்த டெல்லி பாஜகவின் ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, தனக்குக் கொலை மிரட்டல் வந்ததாக நுபுர் ஷர்மா அளித்த புகாரின் பேரில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது டெல்லி காவல் துறை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE