மகாராஷ்டிராவில் அருவியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு

By KU BUREAU

லோனாவாலா: மகாராஷ்டிர மாநிலத்தில் அருவியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல் லப்பட்டு உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள சய்யாத் நகரைச் சேர்ந்தவர் ஷாஹிஸ்டா அன்சாரி (36). இவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த அமிமா அன்சாரி (13), உமேரா அன்சாரி (8), அத்னான் அன்சாரி (4), மரியா சய்யாத் (9) உள்ளிட்டோருடன் புனே மாவட்டம் லோனாவாலாவிலுள்ள பூஷி அணைக்கு அருகிலுள்ள அருவிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றார்.

அருவி நீர் விழுந்து ஓடி வரும் ஓடையில் அனைவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கரைக்குத் திரும்ப முடியாமல் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு கும்பலாக நீரில் தத்தளித்தனர். அவர்களைக் காப்பாற்ற கரையில் இருந்தவர்கள் அருகில் இருந்த காய்ந்த கொடிகளை துண்டித்து வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை காப்பாற்ற செய்த முயற்சிகள் பலனளிக்காமல் போயின.

தொடர்ந்து வெள்ளநீர் அதிகரிக்கவே அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஷாஹிஸ்டா அன்சாரி, அமிமா, உமேரா ஆகியோரின் உடல்களை தீயணைப்புப் படையினர். மேலும் அத்னான் அன்சாரி, மரியா ஆகியோரின் உடல்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது புனே நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE