செல்போன் டார்ச் மூலம் சிகிச்சை: பிஹார் அரசு மருத்துவமனையின் அவலம்!

By காமதேனு

பிஹார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் உள்ள சாசாராம் நகர அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக, மருத்துவர்கள் தங்களது ஸ்மார்ட்போன் டார்ச் வெளிச்சம் மூலம் ஆபத்தான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடர்ந்து மின்தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால் இந்தச் சம்பவம் நடந்ததாக சாசாராம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் அகிலேஷ் குமார் ஒப்புக்கொண்டார்,

சாசாராமில் உள்ள அரசு மருத்துவமனையான சதர் மருத்துவமனையில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் சீர்குலைந்துள்ளதாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம், அனாலும் இந்தப் பிரச்சினை சீர்செய்யப்படாத காரணத்தால் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர் என்று அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

தொடர் மின்தடையால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளான இந்தப் புகார் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பதிலளித்த ரோஹ்தாஸ் மாவட்ட நீதிபதி தர்மேந்திர குமார், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE