கேரள அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன், அரசு மட்டத்தில் நடத்திய உரிய தேதியில் சம்பளம் போடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. ஆறு தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு அழைத்திருக்கும் நிலையில் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் செயலாளர் பிஜூ பிரபாகர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தொழிற்சங்கங்கள் போராட்ட முடிவைக் கையில் எடுத்துள்ளன. மே மாதம் பணி செய்ததற்கான சம்பளத்தை ஜூன் மாதம் 6-ம் தேதி வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய நிலையில், நடப்புமாதச் சம்பளத்தை நிதிச்சுமைக் காரணமாக 19-ம் தேதிதான் வழங்கமுடியும் என பிஜூ பிரபாகர் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்திருந்தார். ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதன் எதிரொலியாக உரிய தேதியில் சம்பளம் கேட்டு போராடவும் முடிவெடுத்துள்ளன.
கேரள அரசு போக்குவரத்துக்கழகம் கடந்த மாதத்தில் 193 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதுபோக 50 கோடி ரூபாய் கேரள அரசு போக்குவரத்துத்துறைக்கு கொடுத்துள்ளது. ஆனாலும் உரிய தேதியில் சம்பளம் வினியோகிப்பதில்லை எனத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் சி.ஐ.டி.யு தலைவர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், “போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, போக்குவரத்துக் கழகம் தான் வழங்கவேண்டும். அவர்கள் முடிவுதான் அது என்கிறார். போகுவரத்துக்கழகமோ அரசு நிதி விடுவிக்கும்போதுதான் சம்பளம் வழங்கமுடியும் என்கிறது. இது சரியான அணுகுமுறை இல்லை. இதனால் வரும் திங்கள் முதல் தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திருவனந்தபுரத்தில் உள்ள மேலாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். அதேநேரம் வழக்கமான பேருந்து சேவைக்கு பாதிப்பு இல்லாதவகையில் போராட்டங்களை வடிவமைப்போம்” என்றார்.