'எனக்கு நானே': தன்னைத் தானே மணந்துகொள்ளும் குஜராத் பெண்

By காமதேனு

குஜராத் மாநிலம் வதோதராவில் க்‌ஷமா பிந்து என்ற 24 வயதான இளம் பெண் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஜூன் 11-ல் நடைபெறவுள்ள இந்தத் திருமணத்திற்கு மாப்பிள்ளையைத் தவிர மற்ற அனைத்தும் தயாராக உள்ளன. ஆம், இது ஒரு சுயதிருமணம் ஆகும்.

ஃபெராஸ், சிந்தூர் மற்றும் பிற பாரம்பரிய சடங்குகள் உட்பட பாரம்பரிய முறையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. இது அநேகமாக குஜராத்தின் நடைபெறும் முதல் சுயதிருமணமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

தனது சுயதிருமண முடிவு குறித்து பேசிய க்‌ஷமா, "நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகளாக விரும்பினேன். அதனால்தான் என்னை நானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். ஒருவேளை நம் நாட்டில் சுயஅன்புக்கு ஒரு முன்மாதிரியாக இந்தத் திருமணம் இருக்கலாம்" என்று கூறினார்.

மேலும், “சுயதிருமணம் என்பது உங்களுக்காக நீங்கள் இருப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் நிபந்தனையற்ற அன்பினை வெளிப்படுத்துகிறது. பொதுவாக மக்கள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன். அதனால்தான் இந்தத் திருமணம்” என்றும் விளக்கினார்.

சுயதிருமணம் என்பதை மக்கள் பொருத்தமற்றதாக நினைக்கலாம் என்பதை தான் உணர்வதாகவும், ஆனால் பெற்றோர் திறந்த மனதுடன் தனது திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகவும் க்‌ஷமா கூறினார். கோத்ரியில் உள்ள ஒரு கோயிலில் இவரது திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்துக்குப் பின்னர் கோவாவுக்கு இரண்டு வார காலம் தேனிலவுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE