அயோத்தியின் ராமர் கோயில் பகுதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநில கலால் துறை இணையமைச்சர் நிதின் அகர்வால் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பீம்ராவ் அம்பேத்கர், கலால் கடைகளின் விதிகள் (1968)-ல் செய்யப்பட்ட திருத்தங்களின் நிலை குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிதின் அகர்வால் இந்த உத்தரவை வெளியிட்டார்.
இத்தகைய சூழலில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமர் கோயிலில் கட்டப்படவுள்ள கர்ப்பகிரகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான துறவிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ராமர் கோயிலின் கருவறை ஜனவரி 2024 மகர சங்கராந்திக்குள் தயாராகிவிடும் என்றும், அதன் பின்னர் அங்கு ராமர் சிலை நிறுவப்படும் எனவும் ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், சூரியனின் முதல் கதிர்கள் ராமர் சிலை மீது படும் வகையில் கோயில் கட்டப்பட்டு வருகிறது என ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார், அதன் பிறகு கோயில் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.