ஸ்டெர்லைட் வழக்கில் சிபிஐ விசாரணை ஒரு தலைபட்சமாக உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்துள்ள இறுதி குற்றப்பத்திரிகையில், 101 பேரில் ஏற்கனவே 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராயினர். இந்நிலையில் இன்று 74 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 64 பேர் மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்பாக நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட 64 பேரும் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை வரும் ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், "சிபிஐ விசாரணை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக உள்ளது. குற்றப்பத்திரிகையில் ஒரு காவலரின் பெயர் இடம்பெறவில்லை. போராடிய பொதுமக்களைக் குற்றவாளிகளாக மாற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மேலும், சிபிஐ அறிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்க உள்ளோம்" என்றார்.