வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை 134 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு எரிவாயு விலை ரூ.2,373க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை குறைப்பு அவர்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. சமையல் எரிவாயு விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், சமையல் எரிவாயு விலையை பஞ்சாப், உபி, கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்த்தாமல் ஒரே நிலையில் வைத்திருந்தது மத்திய அரசு. தேர்தல் முடிந்ததும், திடீரென மார்ச் 22-ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ரூ.965.50 என விலை உயர்ந்தது.
இதையடுத்து, மே 7-ம் தேதி திடீரென வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 அதிகரித்தது. இதனால், சமையல் எரிவாயு விலை ரூ.1000ஐ தாண்டியது. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.1018.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எரிவாயு விலை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ.134 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ.2,507க்கு விற்கப்பட்ட வர்த்தக எரிவாயு விலை, நடப்பு மாதம் ரூ.103.50 குறைந்து, ரூ.2,373 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.