இயக்குநர் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட வெற்றிக்குப் பிறகு நடிகை நயன்தாராவுடன் திருமணம் என முடிவு செய்துள்ளதாக முன்பு இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஜூன் 9-ம் தேதி திருமணம் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும், பட வெற்றிக்கு நன்றி சொல்ல திருப்பதி கோயிலுக்குச் சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி அங்கு திருமண ஏற்பாடுகளையும் கவனித்து வந்தனர். ஆனால், இப்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆனால், திருப்பதியில் அத்தனை பேருக்கு அனுமதி இல்லை என்பதால் குறித்த அதே தேதியில் சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடாம். இவர்களின் திருமண நிகழ்வை ஒளிபரப்ப பிரபல ஓடிடி நிறுவனமொன்றிற்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 9-ம் தேதி காலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என தம்பதிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாளான ஜூன் 8-ம் தேதி திருமண வரவேற்பு திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திருமண வரவேற்பில் தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 200 பேர் கலந்து கொள்ள உள்ள அந்த வரவேற்பு நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். விக்னேஷ் சிவனிற்கும் சினிமாத்துறையில் நிறைய நண்பர்கள் உண்டு என்பதால் நெல்சன், கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்களும் திருமண வரவேற்பிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் குலதெய்வ கோயில் வழிபாட்டிற்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சென்றிருந்தனர். இந்நிலையில் விளையாட்டின் மூலம் தீவிர உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருப்பதாக விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளபக்கத்தில் கூறியுள்ளார்.