இலங்கை விமான சேவைக்கு உதவும் அதானி குழுமம்: பின்னணி என்ன?

By காமதேனு

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அந்நாட்டின் விமான சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இந்நிலையில், இலங்கை விமான சேவைக்குத் தன்னாலான உதவிகளைச் செய்துவருகிறது திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம். கூடவே, அதன் மூலம் வருமானத்தையும் பெருக்கிவருகிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக, அங்கு எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சர்வதேச விமான சேவைகளில் இலங்கை பெரும் சவால்களைச் சந்திக்கிறது.

இந்தச் சூழலில், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று எரிபொருள் நிரப்பிக்கொள்வதை இலங்கை விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானங்கள் வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. கொழும்பு விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணத் தொலைவில் அமைந்திருக்கிறது திருவனந்தபுரம் விமான நிலையம். சென்னை சர்வதேச விமான நிலையத்தைவிடவும், திருவனந்தபுரம் விமான நிலையம் சற்றே அருகில் அமைந்திருப்பதாலும் அங்கு எரிபொருள் விலை குறைவு என்பதாலும் அந்த விமான நிலையத்தையே பயன்படுத்திக்கொள்கிறது இலங்கை விமான சேவை.

கொழும்புவிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கி, எரிபொருள் நிரப்பிக்கொண்டது. அதேபோல், கொழும்புவிலிருந்து ஃப்ராங்க்பர்ட் செல்லும் விமானமும் இந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தது. ஜூன் 1 மற்றும் 2-ம் தேதிகளில் கொழும்புவிலிருந்து மெல்போர்ன் மற்றும் ஃப்ராங்க்பர்ட்டுக்குச் செல்லும் நான்கு விமானங்களும் திருவனந்தபுரத்தில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிச் செல்லும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தொலைதூரம் பயணிக்கும் விமானங்கள் ஒரு முறைக்கு 100 டன் எரிபொருளை நிரப்பிக்கொள்கின்றன.

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விநியோகம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம்

2021 அக்டோபர் முதல் அதானி குழுமத்தின் ‘அதானி ஏர்போர்ட்ஸ்’ நிறுவனத்தால் திருவனந்தபுரம் விமான நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு விமானங்கள் தரையிறங்க விதிக்கப்படும் கட்டணங்கள் மூலம் விமான நிலையத்துக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. கூடவே, எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியால் கேரள அரசுக்கும் மத்திய அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE