"அதிமுகவிற்கு தேர்தலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தோல்விகளால் விரக்தியின் அடிப்படையில் திமுக அரசின் மீது எடப்பாடி பழனிசாமி அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்" என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாவும், திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுகவிற்கு தேர்தலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தோல்விகளால் விரக்தியின் அடிப்படையில் திமுக அரசின் மீது எடப்பாடி பழனிசாமி அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.
தமிழக அரசியலில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தே விட்டது. இதைத்தான் சசிகலாவும் கூறியிருக்கிறார். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவசர, அவசரமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில், தமிழ்நாடு அரசின் மீது பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். இந்த ஓராண்டு காலத்தில் திமுக அரசு எண்ணற்ற பல சாதனைகளைச் செய்துள்ளது. நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடி கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நான் முதல்வன் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, கரோனா நிவாரண நிதி என எண்ணற்ற பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார் ஆனால், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது போல எடப்பாடி பழனிச்சாமி இந்த உண்மைகளை மறைத்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்" என்று கூறினார்.
மேலும்," தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் கிடந்தது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் சாதி, மதச்சண்டைகள் இல்லாமல் மிக அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. துப்பாக்கிக் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கடைசி ஓராண்டு ஆட்சியில் 1695 கொலைகள் நடைபெற்றுள்ளது. கொள்ளைகள் 146, கூலிப்படை கொலைகள் 30, போலீஸ் துப்பாக்கிச்சூடு 16 சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த புள்ளி விவரங்களே அதிமுக திமுக ஆட்சிக்கு சாட்சியாக உள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் இவையெல்லாம் குறைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்," ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழிக்க சட்டம் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் 813 பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எடப்பாடி பழனிசாமி, குறைகளை மட்டுமே கண்டு அதைப் பெரிதுபடுத்தி பேசி வருகிறார். ஆனால், திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது" என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.