அலுவலகத்திற்குள் புகுந்து பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு: அரசு ஊழியர் வெறிச்செயல்!

By காமதேனு

தேனியில் சமூக நலத்துறை அலுவலகத்திற்குள் புகுந்து திட்ட அலுவலரை அரசு ஊழியர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலராகப் பணியாற்றுபவர் ராஜராஜேஸ்வரி (52). இந்த அலுவலகத்தில் போடியைச் சேர்ந்த உமாசங்கர் (52) கடந்த 2015-ம் ஆண்டு ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றியுள்ளார். இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் ராஜராஜேஸ்வரி மீது இவருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்திற்கு இன்று வந்த உமாசங்கர், அலுவலகத்திற்குள் புகுந்து ராஜராஜேஸ்வரியின் தலை, கை மற்றும் தோள்பட்டை போன்ற இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ராஜராஜேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உமாசங்கரை கைது போலீஸார் கைது செய்து தேனி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ராஜராஜேஸ்வரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் ஐந்து வருடம் காத்திருந்து திட்ட அலுவலரை அரசு ஊழியர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE