நடிகர் அஜித் சொன்ன குட்டி ஸ்டோரி ஒன்றை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது பகிர்ந்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ‘வலிமை’ படப்பிடிப்பிற்கு அடுத்து தன்னுடைய அடுத்தப் படத்தில் பிஸியாக இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ரசிகர் மன்றங்களைக் கலைத்தவர் சமூக வலைதளங்கள், பொது விழாக்களில் இருந்து விலகியே இருக்கிறார்.
அவர் சார்பாக முக்கியமான அறிக்கைகளை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, அஜித் பெயரில் ஒரு குட்டிக்கதை ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த கதையில், வயதான தம்பதிகள் ஒரு கழுதையை மேய்த்து கொண்டுப் போகிறார்கள். அதை வேடிக்கைப் பார்க்கும் இருவர் அவர்களைக் கேலி செய்யும் விதமாக, ‘இவர்களுக்கு இந்த கழுதையை எப்படி உபயோகித்துப் பயணப்பட வேண்டும் என்றே தெரியவில்லை. வயதான காலத்தில் கஷ்டப்படுகிறார்கள்’ என்று பேசுகிறார்கள்.
அதுவே இன்னொரு பக்கம், அதே தம்பதி இருவரும் அந்த கழுதையின் மீது ஏறி பயணிக்கும் போது, அதே இருவர் தம்பதியை பார்த்து, ‘இவர்கள் இந்த விலங்கின் மீது கொஞ்சம் கூட கருணை இல்லாதவர்கள். எப்படி பாடாய் படுத்துகிறார்கள்’ என்று பேசுகிறார்கள். மூன்றாவது புகைப்படத்தில் அந்த வயதான பெண்மணி கழுதை மீதேறிச் செல்ல அந்த நபர் உடன் நடந்து போகிறார். இதை பார்த்து, ' அவர்தானே குடும்பத்தின் தலைவன். அவர் அமர்ந்து போகாமால் இப்படி அந்த பெண்மணியை வைத்து கொண்டு போகிறார்' என்று சொல்கிறார்கள்.
இதைக்கேட்டு அந்த முதியவர் கழுதை மீது ஏறி பயணிக்க அதே நபர்கள், 'இப்படி வயதான மனைவியை நடக்க விட்டுப் போகிறானே' என்று பேசுகிறார்கள். கடைசியில் கழுதையை அந்த தம்பதிகள் சுமந்து கொண்டு போக, அதற்கும் அவர்கள், 'இந்த முட்டாள் தம்பதி கழுதையைப் போய் சுமக்கிறார்களே' என்று பேசுகிறார்கள்.
இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, நாம் நம் செயலின் மூலம் ஒவ்வொருவரையும் மகிழ்விக்க முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் உங்களைக் குற்றம் சொல்ல யாரேனும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அதனால், நீங்கள் சரி என்று நினைப்பதை செய்யுங்கள். தேவையில்லாத விமர்சனங்களால் திசை திரும்பாதீர்கள் என்று அதில் உள்ளது. இந்த கதை புகைப்படத்தை அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்து, இது யாருக்கும் பொருந்துமோ அவர்கள் எடுத்து கொள்ளலாம். நிபந்தனையற்ற அன்புடன், அஜித் என ட்விட் செய்துள்ளார்.