விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா அந்தப் பணியை விட்டு விலகுவதாக கூறியுள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே பிரியங்கா. ‘சூப்பர் சிங்கர்’, ‘பிக்பாஸ் ஜோடி’, ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். கலகலப் பேச்சுக்கு பெயர் போன பிரியங்காவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை அவர் பிடித்தார். இந்தநிலையில் ஏப்ரல் மாத இறுதியில் பிரியங்கா தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த கொண்டாட்ட வீடியோ மற்றும் தனது சின்னத்திரை நண்பர்களுடன் கலந்துரையாடும் காணொலியை தனது யூடியூப் சேனலில் தற்போது பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா.
அந்த வீடியோவில் இறுதியில், ‘குக் வித் கோமாளி’ பாலாவுடன் பிரியங்கா பேசிக் கொண்டிருக்கிறார். அதில்," எனக்கு 30 வயதாகி விட்டது. அதனால் சிறிது காலத்தில் ஆங்கரிங் பணியை விடப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.
பிரியங்காவின் இந்த பதிலுக்கு பாலா, “மைக் பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகி விட முடியாது. அந்த மைக்குக்கே பிடிச்சவ நீ. நீ விடணும்ன்னு நினைத்தாலும் அது உன்னை விடாது” என்று கூறுகிறார். பிரியங்காவின் இந்த பதிலைத் தான் பலரும் அவர் தொகுப்பாளர் பணியை விட போகிறார் என்று கூறி வருகின்றனர். ஆனால், பிரியங்கா இப்போது வரை ‘சூப்பர் சிங்கர்’, ‘பிக்பாஸ் ஜோடி’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். எனவே, அவர் வீடியோவில் கூறியது விளையாட்டா, நிஜமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரியங்காவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.