கேரளத்தை அச்சுறுத்தும் மேற்கு நைல் வைரஸ்: முதல் பலியால் சுகாதாரத் துறை அலர்ட்

By காமதேனு

கேரளத்தில் மேற்கு நைல் காய்ச்சல் என்னும் வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் ஒருவர் பலியாகி இருக்கும் நிலையில் கேரள சுகாதாரத்துறை பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

கேரளத்தின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவருக்கு கடந்த 17-ம் தேதி, காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதனைத் தொடர்ந்து வீட்டு அருகாமையில் இருக்கும் பல மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமடையாததால் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்துபார்த்த போது, அவருக்கு மேற்கு நைல் காய்ச்சலுக்குண்டான வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த மேற்கு நைல் காய்ச்சல் மனிதர்களுக்கு மிகவும் தீவிரமான நரம்பியல் நோயை உருவாக்கும். கொசு மூலம் இந்த நோய் பரவும் என்பதால் வீட்டைச் சுற்றி கொசு உற்பத்தி ஆகாதவகையில் பராமரிக்க கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலைத் தாண்டி ஆரம்பத்தில் வேறு எந்த அறிகுறிகளும் இருக்காது என்பது இதில் மிகவும் சவாலான விசயமாகப் பார்க்கப்படுகிறது. க்யூலெக்ஸ் என்னும் கொசு வகையினால்தான் இந்த வைரஸ் பரவுகிறது.

கேரளத்தில் கடந்த 2011-ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு, 2019-ம் ஆண்டு மலப்புரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பலியாகி இருந்தான். இப்போது 47 வயது நபர் பலியாகியிருப்பது கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE