‘விசித்திர இணைப்புகளை க்ளிக் செய்தால் விபரீதம்!’

By காமதேனு

புகழ்பெற்ற அறிவியல் புனைகதை த்ரில்லரான ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’, நெட்ஃப்ளிக்ஸில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த தொடர். இதன் நான்காவது மற்றும் இறுதி சீஸன் மே 27-ல் வெளியானது. இந்த சீஸனும் வழக்கம்போல ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் விதத்தில் அசத்தலாகத் தயாராகியிருப்பதாக விமர்சனங்கள் வெளியாகியிருக்கின்றன. ட்விட்டரில் இது தொடர்பாக ஏராளமான விவாதங்களும் நடந்துவருகின்றன.

இவற்றுக்கிடையே, ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தொடரின் தலைப்பைச் சுட்டிக்காட்டி உத்தர பிரதேசக் காவல் துறை வெளியிட்ட ட்வீட் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

‘ஸ்ட்ரேஞ்சர் லிங்க்ஸை (விசித்திரமான - அந்நிய இணைப்புகள்) க்ளிக் செய்தால் அது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸுக்கு (விசித்திரமான - ஆபத்தான விஷயங்கள்) இட்டுச் செல்லும்’ என்று ட்வீட் செய்திருக்கிறார்கள் உத்தர பிரதேச காவல் துறையினர். கூடவே, பரிச்சயம் இல்லாத இணைய இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மக்களின் விருப்பத்துக்குரிய விஷயங்கள் மூலம், சமூகப் பிரச்சினைகள், குற்றச்செயல்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பினால் அது நல்ல வரவேற்பைத் தருவதுடன், எதிர்பார்த்த பலனையும் கொடுக்கும். அந்த வகையில் உத்தர பிரதேசக் காவல் துறையினரின் இந்த ட்வீட்டும் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அசாம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் காவல் துறையினரும் இதுபோன்ற நகைச்சுவை இழையோடும் விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE