இமாசல பிரதேச அரசின் இலவசத் திட்டங்கள்: ஓர் அலசல்

By ஆர்.என்.சர்மா

இமாசல பிரதேசத்தில் பெண்கள், குழந்தைகளுடைய ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைவு ஆகியவற்றைப் போக்க புதிய சுகாதார திட்டத்துக்கு முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான அரசு இன்று (மே 26) ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசு, மாநில அரசின் மகளிர்-குழந்தைகள் நலத்துறை, சுகாதாரம் – குடும்பநலத் துறை, தொடக்கக் கல்வித் துறை, தேசிய சுகாதார இயக்கம் ஆகியவை இணைந்து இந்த திட்டங்களை அமல்படுத்தும். மகளிர் – குழந்தைகளுடன் நெருங்கிப் பணியாற்றும் அனைத்துத் துறைகளும் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு ஊட்டச்சத்துக் குறைவையும் ரத்த சோகையையும் போக்கும்.

ஏழு கட்டங்கள்

ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்புடன் ஆலோசனை கலந்து இதற்காக ஏழு கட்ட அணுகுமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. வயிற்றுப்போக்கு ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு அதன் காரணம் அறிந்து சிகிச்சை தரப்படும். புரதச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் சோதனைகளில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கேற்ற சிகிச்சை அளிக்கப்படும். புரதச்சத்து அதிகமுள்ள உணவு அவர்களுக்குத் தரப்படும். புரதச்சத்துக் குறைவால் உடல் நலம் மிகவும் குன்றிவிட்ட குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படும்.

குழந்தைகள், வளரிளம் பருவப் பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு ரத்த சோகை இருந்தால் அதைப் போக்க உணவும் மருந்தும் தரப்படும். கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்த சோகை இருந்தால் அவர்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் தகுந்த உணவும் சிகிச்சையும் அளிக்கப்படும். அவர்களுடைய முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

உயர் ரத்த அழுத்தமும் ரத்த சோகையும் உள்ள இளம் கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டு மகப்பேறு நல்லபடியாக நடைபெற சிறப்பு கவனம் செலுத்தப்படும். அவர்களுக்கும் தேவைப்படும் ஊட்டச்சத்துகளும் உணவுகளும் வழங்கப்படும். ஊட்டச்சத்துக் குறைவால் குறைந்த எடையும் உயரமும் உள்ள குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்தப்படும். எளிதில் கிடைக்கும் ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள், பழங்கள் பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்படும், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்துகள் அவரவர் தேவைக்கேற்ப சேர்க்கப்படும்.

மாநில அரசு இந்த திட்டத்துக்கு 65 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல், ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க முன்னுரிமை தரப்படுகிறது. ஜன் அந்தோலன் திட்ட மாதிரியில் இதுவும் அமல்படுத்தப்படும். குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் இளம் தாய்மார்களின் உடல் நலன் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேசிய குடும்பநல சர்வே-5 அறிக்கையில் காணப்படும் குறைகள் நீக்க கவனம் செலுத்தப்படும்.

இலவச பஸ் பயணம்

இமாசல பிரதேசத்துக்குள் இயங்கும் மாநில அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண் பயணிகளுக்குப் பயணக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இதற்கான அறிவிப்பை இமாசலம் உருவாக்கப்பட்ட தின (ஏப்ரல் 15) கொண்டாட்டத்தின்போதே முதல்வர் அறிவித்தார். இப்போது இதன் அமல்பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இமாசல பிரதேசத்தின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த மாநிலப் போக்குவரத்து கார்ப்பரேஷன் 160 கோடி ரூபாய் கடன் வாங்கி 360 புதிய பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது.

கிராமப்பகுதிகளில் வாழ்வோரின் வீடுகளுக்கு இம்மாதம் முதல் தேதியிலிருந்து வீட்டுக்குக் குழாய் மூலம் வழங்கும் குடிநீருக்குக் கட்டணம் ஏதும் வாங்கப்பட மாட்டாது. அதாவது தண்ணீர் வரியோ கட்டணமோ கிடையாது.

முதலமைச்சரின் ‘கிரிஹிணி சுவிதா யோஜனா’ திட்டப்படி, சமையல் எரிவாயு பெற்ற மகளிருக்கு ஆண்டுக்கு மேலும் இரண்டு சமையல் எரிவாயு உருளைகள் விலையில்லாமல் (இலவசமாக) வழங்கப்படும். சமையல் எரிவாயு இணைப்பு தந்த போது ஒரு உருளைதான் தந்தனர்.

மாநில அரசின் பெண் ஊழியர்கள் மகப்பேறுக்குப் பிறகு குழந்தைகளைப் பராமரிக்க, ஊதியத்துடன் கூடிய விடுப்பு மூன்று மாதங்களுக்கு (12 வாரங்கள்) அனைவருக்கும் வழங்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் தொழில்தொடங்க வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. கடன் பெறுவதற்காக முன்கூட்டி செலுத்த வேண்டிய காப்புத் தொகையும் அதற்கான வட்டியும் ரத்தாகிறது. இதனால் 11,133 பேர் பயனடைவார்கள்.

இமாசல பிரதேச அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஒன்றிய அரசின் சுகாதாரம் – குடும்பநலத் துறையுடன் இணைந்து பிரதம மந்திரி பாரத சுகாதார அடித்தளக் கட்டமைப்பு இயக்கத்துடன் சேர்ந்து மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும். பெருந்தொற்று போன்ற நோய்கள் எதிர்ப்படும் காலத்தில் மக்களுக்கு சுகாதார வசதிகளைப் பெருமளவில் உடனுக்குடன் அளிப்பதற்கான வசதிகள் இதன் மூலம் உருவாக்கப்படும். மாநிலத்தின் ஆரம்ப சுகாதார நிலைய கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

படித்த இளைஞர்களால் நடத்தப்படும் கூட்டுறவு சங்கங்களை ஆதரிக்கும் வகையில், அவை தொடர்ந்து செயல்பட மானியம் அளிக்கப்படும். வேளாண் உற்பத்திப் பொருட்களைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சந்தைப்படுத்த பயிற்சியும் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும். அத்துடன் மானியம், மூலதன நிதி, பங்குத் தொகைக்கான நிதி ஆகியவற்றையும் மாநில அரசு வழங்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE