டெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு அரங்கு 2010-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி உருவாக்கப்பட்ட முக்கியமான மைதானம் ஆகும். கர்னாடக இசைக் கலைஞர் தியாகராஜரின் நினைவாக அவரது பெயர் இந்த மைதானத்துக்குச் சூட்டப்பட்டது. டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இந்த மைதானம் இயங்குகிறது.
இங்கு காலையிலும் மாலையிலும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக, மாலை 7 மணிக்கு மேல் இங்கு பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தினமும் 7 மணிக்கு முன்னதாக விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுவந்தனர். இதனால் அவர்கள் கடும் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில், அவர்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெரியவந்திருக்கிறது. டெல்லி அரசின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) சஞ்சீவ் கீர்வர், மாலை 7 மணிக்கு மேல் தனது வளர்ப்பு நாயுடன் இந்த மைதானத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதால்தான் விளையாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சுமார் அரை மணி நேரம் அவர் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக, திறன் மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களின் உரிமை மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
1994 பேட்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சீவ் கீர்வர், இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். சில சமயங்களில் தனது வளர்ப்பு நாயுடன் இந்த மைதானத்தில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்தான் என்றாலும், தன்னால் விளையாட்டு வீரர்களின் அன்றாடப் பயிற்சி தடைபடுவதாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்றும் விளக்கமளித்திருக்கிறார்.
இதற்கிடையே, மாலை 4 மணி முதல் 6 மணி வரைதான் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என்றும், தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக மாலை 7 மணி வரைக்கும் அனுமதி வழங்கப்படுவதாகக் கூறியிருக்கும் தியாகராஜா மைதான நிர்வாக அதிகாரிகள், 7 மணிக்கு மேல் அரசு அதிகாரிகள் இம்மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்களா என்பது குறித்து உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.
இரவில் பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு விளக்கு வசதிகள் கொண்ட இந்த மைதானத்தில் இரவு 9 மணி வரையில்கூட சிறுவர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்துவந்ததாகவும், ஐஏஎஸ் அதிகாரியின் நடைப்பயிற்சி காரணமாக அது தடைபட்டிருப்பதால் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் ஏற்கெனவே, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கூடவே, கோடைக்காலம் என்பதால் பயிற்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில், தியாகராஜா மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுவந்தவர்கள் ஜவாஹர்லால் நேரு மைதானத்துக்கு வருவதால் அங்கு கூட்ட நெரிசல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.