ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் கலவரம் வெடித்துள்ளது. அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
ஆந்திரா மாநிலத்தில் ஏற்கெனவே இருந்த 13 மாவட்டங்கள் தற்போது 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கிழக்கு கோதாவரியில் இருந்து கோனசீமா மாவட்டம் மே 4 அன்று பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்திற்கு `பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா' எனப் பெயரை மாற்றுவதற்கான அறிவிப்பு மே 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன் மொழிவுக்கு ஆட்சேபம் மற்றும் பரிந்துரைகள் இருந்தால் சொல்லலாம் என அரசு சார்பில் அழைப்பு விடப்பட்டது. இந்த பெயர் மாற்றத்திற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் இந்த பெயர் மாற்றத்திற்கு எதிராக அமலாபுரத்தில் நேற்று கலவரம் வெடித்தது. போக்குவரத்துறை அமைச்சர் அமைச்சர் பினிபே விஸ்வரூப் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் ஆகியோரின் வீடுகள் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த அமைச்சர் விஸ்வரூப் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸார் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது காவல்துறை வாகனம் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 20- க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்துள்ளனர்.
"பல உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுத்தான் இந்த மாவட்டத்துக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்ட நினைத்தோம். இதில் சர்ச்சை வெடித்து வன்முறை ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. சிலர் அம்பேத்கரின் பெயரைச் சூட்டுவதை எதிர்க்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம். சில அரசியல் கட்சிகள் மற்றும் சமூகவிரோதிகள் போராட்டக்காரர்களைத் தூண்டி விட்டுள்ளனர்" என்று ஆந்திரா உள்துறை அமைச்சர் தனேதி வனிதா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பதற்ற நிலை நீடிப்பதால் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கோனசீமா பரிரக்சனா சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடை உத்தரவை மீறி தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு காக்கிநாடாவில் இருந்து கூடுதல் படை அமலாபுரத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏலூர் ரேஞ்ச் டிஐஜி பாலராஜூ கூறுகையில், "தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அமலாபுரம் நகரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில், தீ வைப்பு மற்றும் கல் வீச்சில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
போக்குவரத்து துறை அமைச்சர் விஸ்வரூப் கூறுகையில், "மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்பது தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனாவின் கோரிக்கையாக இருந்தது. இப்போது, மக்கள் போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள். இச்செயல் கண்டிக்கத்தக்கது. இந்த கலவரத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
அமலாபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகள் பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.