வங்கிக் கணக்கில் 1,804 கோடி ரூபாய்: ராஜீவ் நினைவுதினத்தில் அசத்திய காங்கிரஸ் முதல்வர்!

By காமதேனு

விவசாயிகள், விவசாயக் கூலிகள், கால்நடை வளர்ப்பவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என 26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மொத்தம் 1,804.50 கோடி ரூபாய் நிதியை அவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக அனுப்பியிருக்கிறார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுதினமான மே 21-ல் அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாநில அரசு சார்பில் நலத்திட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, ராஜீவ் காந்தி பெயரில் உருவாக்கப்பட்ட கிஸான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டுக்கான கரீஃப் (சம்பா) சாகுபடிக்கான முதல் தவணையாக 1,720 கோடி ரூபாயை 11 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு முதல்வர் பூபேஷ் பகேல் நேரடியாக அனுப்பினார்.

கிராமின் கிருஷி புமிஹீன் மஸ்தூர் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 71.8 கோடி ரூபாயை விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர் அனுப்பினார். கோதான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு 13.31 கோடி ரூபாயை அவர் அனுப்பினார்.

இந்தத் திட்டங்களின் மூலம் விவசாயிகள், விவசாயக் கூலிகள், கால்நடை வளர்ப்போர் என 26.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலன் பெறுவார்கள் என சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE