ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாகுர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பள்ளிச் சிறுமியை ஒரு இளைஞர் கண்மூடித்தனமாகத் தாக்கும் காணொலி வைரலாகியிருக்கிறது. பள்ளிச் சீருடையில் கையில் புத்தகப் பையுடன் இருக்கும் அந்தச் சிறுமியை அந்த இளைஞர் மீண்டும் மீண்டும் உதைக்கும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.
இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிடப்பட்ட காணொலி ஒன்றில், அந்தச் சிறுமி குறித்த விவரங்களும், அவரைத் தாக்கும் இளைஞர் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அதைப் பார்த்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அந்த இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.
‘இது தொடர்பாக விசாரணை நடத்துங்கள். குற்றம்சாட்டப்பட்டவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தகவல் தெரிவிக்கவும்’ என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.
இதையடுத்து, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக பாகுர் மாவட்ட காவல் துறையினர் முதல்வருக்குப் பதிலளித்திருக்கிறார்கள்.