பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு திடீரென குறைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையையொட்டியே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. ரஷ்யா- உக்ரைன் போரினால் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. இதையடுத்து, சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலைகள் எகிறியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, சமையல் எரிவாயு விலை ஆயிரத்தை தாண்டியது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு மானியம் பாதியாக வந்து கொண்டிருந்தது. அரசு கொடுக்கும் மானியம் ஏழை, நடுத்தர மக்களுக்கு சற்று உதவியாக இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு மானியத்தை படிப்படியாக குறைத்து வந்தது. தற்போது, நிறுத்தியே விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் வாகனங்கள் வைத்திருப்போர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ம் குறைத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கலால் வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் 12 சமையல் எரிவாயுக்கு ஒரு ஆண்டுக்கு தலா ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.