பஞ்சாப் காங்கிரஸ் கட்சியிலிருந்து மே 14-ல் விலகிய சுனில் ஜாக்கர், இன்று பாஜகவில் இணைந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், ‘காங்கிரஸ் கட்சியில் நேர்மையான தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாது’ எனக் காட்டமாகக் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் சரண்ஜீத் சிங் சன்னியைப் பற்றிப் பேசும்போது, பட்டியலினச் சமூகத்தினர் குறித்து அவதூறாகப் பேசியதாக சுனில் ஜாக்கர் மீது புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அவருக்குக் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் எந்த விளக்கமும் அளிக்க முன்வரவில்லை. இதையடுத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இந்தச் சூழலில், அவர் கட்சியிலிருந்து விலகினார்.
மூன்று முறை எம்எல்ஏ-வாகவும் ஒருமுறை எம்.பி-யாகவும் இருந்த சுனில் ஜாக்கர் பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் இந்து சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவராகக் கருதப்பட்டவர். பஞ்சாப் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது சுனில் ஜாக்கர் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனப் பேச்சு எழுந்தது. முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் காட்டிய காங்கிரஸ் தலைமை சரண்ஜீத் சிங் சன்னியையே முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இது சுனில் ஜாக்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே அமரீந்தர் சிங்குக்குப் பதிலாக சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அதைக் கடுமையாக விமர்சித்தவர் சுனில் ஜாக்கர். அமரீந்தர் சிங்குடனான மோதலின்போது, கூடவே காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியைக் கேட்டுப் பெற்றார் சித்து. அதுவரை பஞ்சாப் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் சுனில் ஜாக்கர்தான்.
காங்கிரஸிலிருந்து விலகுவதாக ஃபேஸ்புக் நேரலையில் சுனில் ஜாக்கர் அறிவித்ததைத் தொடர்ந்து, ‘சுனில் ஜாக்கரைக் காங்கிரஸ் இழக்கக் கூடாது. அவர் தங்கத்தைப் போல ஒரு சொத்து. கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என சித்து ட்வீட் செய்தார்.
தற்போது சுனில் ஜாக்கர் பாஜகவில் சேர்ந்திருக்கும் நிலையில், அமரீந்தர் சிங் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘சரியான கட்சியில் சரியான மனிதர் சேர்ந்திருக்கிறார். பாஜகவில் சேர்ந்த சுனில் ஜாக்கருக்கு வாழ்த்துகள். அவரைப் போன்ற நேர்மையான, பொறுப்புமிக்க தலைவர்களால் காங்கிரஸில் சுதந்திரமாகச் செயல்பட முடியாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுனில் ஜாக்கர், தான் சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்டதாகவும் தனது நோக்கம் கேள்விக்குட்படுத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், “காங்கிரஸ் கட்சி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம். ஆனால், என்னை அடக்கிவைக்க முடியவில்லை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சுனில் ஜாக்கருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்றும், பஞ்சாப் பாஜகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் பேசப்படுகிறது.