``ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய - மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது'' என உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள முரணான தகவல்களைக் களைவதற்காக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவின் மீதான விசாரணையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர, மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவதல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சந்திரச்சூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
`வரிவிதிப்பில் மாநில மற்றும் மத்திய அரசிற்குப் பிரத்யேக அதிகாரங்கள் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டவை ஆகும். அரசியல் சாசன பிரிவு 246A படி வரி விதிப்பு விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களில் சம அளவு அதிகாரம் உள்ளது. அதுபோல அரசியல் சாசன சட்டத்தில் 279-வது பிரிவு மத்திய -மாநில அரசுகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்களிக்கும் கட்டமைப்பு என்பது 1/3 என்ற விகிதாச்சாரத்தில் மத்திய அரசுக்கும் 2/3 விகிதாச்சாரம் மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் போட்டிகளுக்கான இடமாகவும் மாறி உள்ளது.
மேலும் இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தைப் பாதிக்கிறது. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றது. குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் கூட்டாட்சித் தத்துவத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம்மத்திய அரசுக்குச் சற்று அதிகமான அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இந்தியக் கூட்டாட்சி என்பது மாநிலமும் மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக்கடிய இடமாகும். எனவே இதனடிப்படையில் பார்த்தால் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் சம உரிமை உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.