விலை உயர்வைத் தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கும் நிலையில், தற்போது பருத்தி விலை உயர்வதைத் தடுக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பருத்தி ஏற்றுமதிக்கும் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியிருக்கிறது.
உலகச் சந்தையில் எரிசக்தி, பருத்தி, உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையில் கடும் மாற்றங்களை இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் பருத்தியின் விலை 40 சதவீதம் வரை உயரும் என உலக வங்கியின் பண்டச் சந்தை அவுட்லுக் அறிக்கை தெரிவித்திருக்கிறது. 1973-ல் அரபு எண்ணெய்ச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களால் 1970-களில் பண்டச் சந்தையில் மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. உக்ரைன் போர் காரணமாக, அதேபோன்ற சூழல் ஏற்படக்கூடும் என உலக வங்கி கணித்திருக்கிறது.
பருத்தி விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த இரு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கரூர், ஈரோடு ஆகிய நகரங்களிலும் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது. கடந்த ஆண்டு ஒரு கேண்டி (356 கிலோ) 57,000 ரூபாய் என இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 1 லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது.
இதுதொடர்பாக, பருத்தி உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்களிடம் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அவசர அடிப்படையில் பருத்தி விலையில் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, உபரியாக இருக்கும் பருத்தி மற்றும் நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். பருத்தி விவசாயிகள், தொழிலாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.