வேலையின்மை அதிகரிக்கிறது… மதத்தலங்களை குறிவைக்கிறது: பாஜக மீது மாயாவதி திடீர் பாய்ச்சல்

By காமதேனு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மதத் தலங்களை பாஜக குறிவைக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவும், அதன் துணை அமைப்புகளும் மத வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குகின்றன. வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப மதத் தலங்களை பாஜக குறிவைக்கிறது. அது நாட்டை பலவீனப்படுத்தும்.

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளான நிலையில், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஞானவாபி, மதுரா, தாஜ்மஹால் மற்றும் பிற இடங்களின் போர்வையில் மக்களின் மத உணர்வுகள் தூண்டப்படும் விதமானது, நாட்டைப் பலப்படுத்தாது, வலுவிழக்கச் செய்யும். இதில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடைய இடங்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு வருகின்றன. இது அமைதி, நல்லிணக்கம் அல்லது சகோதரத்துவத்தை ஏற்படுத்தாது. மாறாக நாட்டில் பரஸ்பர வெறுப்பையே உருவாக்கும்.எனவே, நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE