ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது நாட்டுக்கே சோக தினம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 142-வது சட்டக்கூறின் கீழ் கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். எனினும், இந்தத் தீர்ப்புக் காரணம் மத்திய அரசின் அற்பமான, மலினமான அரசியல் என்று விமர்சித்திருக்கிறது காங்கிரஸ்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, “ஒரு பயங்கரவாதி பயங்கரவாதிதான். அவர் அப்படித்தான் நடத்தப்பட வேண்டும். இன்றைக்கு, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது எங்களுக்கு வலியையும் ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது. ஒரு முன்னாள் பிரதமரைக் கொன்றவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது, துரதிருஷ்டவசமானது” எனக் கூறினார்.
மேலும், “இன்று தேசத்துக்கே சோக தினம். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர் மட்டுமல்ல, இந்தியா மீதும் இந்தியத்தன்மை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்ற எல்லா இந்தியர்களும் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.
“ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சிக்காக அல்ல, நாட்டுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தார். அற்பத்தனமான, மலிவான அரசியலுக்காக இன்றைய அரசு அவரைக் கொன்றவர்கள் விடுதலை செய்யப்படும் அளவுக்கு ஒரு சூழலை நீதிமன்றத்தில் உருவாக்கியிருக்கிறது எனில், அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கண்டிக்கத்தக்கது” என்றும் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.