ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்வதாக இன்று காலையில் அறிவித்தது. இதைத் தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் விடுதலை அறிவிப்பை அடுத்து பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அற்புதம்மாள் கூறுகையில், “முழுமையாகப் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 31 ஆண்டு கால எங்களின் போராட்டம் குறித்து எல்லோருக்கும் தெரியும். 31 ஆண்டுக் காலம் வாழ்க்கையை சிறையில் கழித்த ஒரு மனிதனின் வாழ்க்கை குறித்து ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் அந்த வேதனை எத்தகையது என்பது புரியும். அதைக் கடந்து வந்திருக்கிறார் பேரறிவாளன். அவனுக்கு தொடர்ந்து தமிழக அரசு பரோல் வழங்கியது. இதற்கு முதல்வருக்கு நன்றி சொல்கிறேன். பேரறிவாளன் விடுதலைக்குக் குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கு மேல் பேச எனக்கு நாயெழவில்லை” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பேரறிவாளன், “கெட்டவர்கள் வாழ்வது, நல்லவர்கள் வீழ்வதென்பது இயற்கையின் நீதி கிடையாது என்கிறார் வள்ளுவர். போராட்டம், தியாகம், அவமானம் எல்லாவற்றையும் எங்க அம்மா கடந்து வந்துள்ளார். எங்கள் பக்கம் இருந்த நியாயம்தான் அம்மாவிற்கு மனவலிமையைக் கொடுத்துள்ளது. மக்சீம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைச் சிறையில் பலமுறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் பல்வேறு உணர்வுகளை அந்த நாவல் எனக்கு ஊட்டியிருக்கிறது. என்னுடைய குடும்பத்தினர் ஆதரவுதான் இந்த நிலையில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அம்மாவின் தனிப்பட்ட வாழ்க்கையை திருடிவிட்டேன் என்ற குற்ற உணர்வு என்னிடம் உண்டு.
இது எங்களுடைய போராட்டம் மட்டும் கிடையாது. எங்கள் விடுதலைக்காகச் சக்தியை மீறி பலர் உழைத்திருக்கிறார்கள். பேரறிவாளர் நிரபராதி. அவருடைய வாக்கு மூலத்தை நான் தவறாகப் பதிவிட்டுவிட்டேன் என 2013-ல் தியாகராஜன் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்து எங்கள் விடுதலை குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன. நீதியரசர். கிருஷ்ணய்யர் ‘உங்களிடம் மண்டியிட்டு கேட்கிறேன்’ என என்னுடைய விடுதலை குறித்து பிரதமருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் மூத்த வழக்கறிஞர்களை என்னுடைய விடுதலைக்குப் போராட அமைத்து கொடுத்தார். என்னுடைய வழக்கறிஞர்கள் என்னிடம் வழக்கு செலவு உள்ளிட்ட எதையும் எதிர்பார்க்கவில்லை. இப்படி நன்றி சொல்லக் கூடிய பட்டியல் நிறைய இருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்துதான் எங்களின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது” என்றார்.