குஜராத்தில், டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இளம் தலைவரான ஹர்திக் படேல் அம்மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். கட்சிக்குள் தான் ஓரங்கட்டப்படுவதாகத் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்துவந்த ஹர்திக், இன்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், ‘நெருக்கடியான சூழல்களில் நம் தலைவர் வெளிநாட்டில் இருந்தார்’ என ராகுல் மீது கடும் விமர்சனத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்திய ஹர்திக் படேல், நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகக் கருதப்பட்டார். மத்திய – மாநில பாஜக அரசுகளுக்குக் கடும் தலைவலியாக உருவெடுத்த அவர் ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இணைந்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அவரைக் கட்சியில் சேர்த்தார்.
இந்தச் சூழலில், தன்னைக் கட்சியிலிருந்து நீக்க சிலர் சதிசெய்வதாகச் சில நாட்களுக்கு முன்னர் ஹர்திக் படேல் குற்றம்சாட்டியிருந்தார். மாநில காங்கிரஸ் தலைமை தன்னை எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பதில்லை என்றும், எந்த முடிவு குறித்தும் தன்னிடம் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறிய அவர், இவ்விஷயத்தில் குஜராத் மாநில காங்கிரஸார் மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
“ஹர்திக் கட்சியில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என காங்கிரஸைச் சேர்ந்த பலரும் கருதுகிறார்கள். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் எனக்குக் கிடைக்கும் வளர்ச்சி தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் நினைத்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்” என்று அவர் கூறியிருந்தார். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட புது மாப்பிள்ளை மாதிரி கட்சியில் தனது நிலைமை இருப்பதாகக் கிண்டலாகத் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களிலேயே, பாஜகவைப் புகழ்ந்து பேசி காங்கிரஸ் கட்சியினரை அதிரவைத்தார். அரசியல் ரீதியாக பாஜக எடுத்த முடிவுகளைப் பாராட்டிய அவர், அக்கட்சி வலிமையுடன் இருப்பதால்தான் அப்படியான முடிவுகளைத் துணிந்து எடுக்கிறது என்று புகழ்ந்திருந்தார். குஜராத்தில் காங்கிரஸ் வலிமை பெற வேண்டும் என்றால், முடிவெடுக்கும் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
சமீபத்தில் குஜராத் சென்றிருந்த ராகுல், இதுதொடர்பாக ஹர்திக் படேலிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராகுல் அதைத் தவிர்த்துவிட்டார்.
இந்நிலையில், கட்சியிலிருந்து விலகும் முடிவை அவர் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் தலைமைக்கு குஜராத் மாநிலத்தைப் பிடிக்கவில்லை என்றும், குஜராத் குறித்த ஆர்வமே இல்லை என்றும் தனது ராஜினாமா கடிதத்தில் ஹர்திக் படேல் தெரிவித்திருக்கிறார். உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் குஜராத் தொடர்பான பிரச்சினைகளைக் கவனிப்பதைவிடவும் செல்போன்களிலேயே மூழ்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், யாருடைய பெயரையும் அதில் குறிப்பிடவில்லை. ‘நெருக்கடியான சூழல்களில் நம் தலைவர் வெளிநாட்டில் இருந்தார்' என மறைமுகமாக ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரிலும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
“எனது இந்த முடிவை எனது சகாக்களும் குஜராத் மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். இந்த முடிவை எடுத்திருப்பதால், குஜராத்தில் இனி ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும் என்றும் நம்புகிறேன்” என்று தனது கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.