`ட்விட்டரில் மீண்டும் ப்ளூடிக் வேண்டும்”- அடம் பிடித்த சிபிஐ அதிகாரிக்கு நீதிமன்றம் வினோத பரிசு!

By காமதேனு

ட்விட்டர் பக்கத்தில் தனக்கு மீண்டும் ப்ளூடிக் அங்கீகாரம் வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்த முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தது. மேலும் அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து இவற்றை சிறப்புப் பரிசாக வைத்துக்கொள்ளுங்கள் என அவருக்கு குட்டு வைத்துள்ளது.

ட்விட்டர்

போலி ட்விட்டர் கணக்குகளை அடையாளம் காணும் வகையில் விஐபிக்கள் பயன்படுத்தும் ட்விட்டர் பக்கத்திற்கு, அந்நிறுவனத்தின் சார்பில் ப்ளூடிக் அங்கீகாரம் கொடுக்கப்பட்டு வருகிறது. ப்ளூடிக் இருந்தால் மட்டுமே அது இவர்களின் சொந்த பக்கமாக கருத்தில் கொள்ளப்படும். இந்நிலையில், சி.பி.ஐ அமைப்பின் இடைக்கால முன்னாள் தலைவராக இருந்த நாகேஸ்வரராவ் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால், அவரின் ப்ளூடிக் அங்கீகாரத்தை ட்விட்டர் நிறுவனம் ரத்து செய்துள்ளது. தனக்கு மீண்டும் புளூடிக் அங்கீகாரம் வழங்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்தில் நாகேஸ்வர ராவ் முறையிட்டார். அவரின் கோரிக்கைக்கு ட்விட்டர் நிறுவனம் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக நாகேஸ்வர ராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய ட்விட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியிருந்தனர்.

நாகேஸ்வர ராவ்

நீதிமன்றம் உத்தரவிட்டும் தனக்கு ப்ளூடிக் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றப் படியேறினார் நாகேஸ்வர ராவ். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் “கடந்த ஏப்ரல் 7-ம் தேதிதான் நாங்கள் உத்தரவு பிறப்பித்தோம். அதற்குள் நீதிமன்றத்தை நாடுவதன் அவசியம் என்ன? உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது என நினைக்கிறோம். அதனால் தான் இத்தகைய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பரிசை எதிர்ப்பார்கின்றீர்கள். பத்தாயிரம் அபராதமும், உங்கள் மனுவை தள்ளுபடி செய்தும் அதை உங்களுக்கு பரிசாக தருகிறோம்“ என உத்தரவில் தெரிவித்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE