கானுயிர்கள் வேட்டையாடப்படுவது, அரிய மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது என இயற்கை வளத்தைச் சுரண்டும் பணிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருக்கின்றன. என்னதான் சட்டங்களை இயற்றினாலும் வனப் பாதுகாப்புக்காக வனத் துறை எனும் தனித்துறையும் சட்ட அமைப்புகளும் இருந்தாலும் இந்தப் போக்கு தொடரவே செய்கிறது. இப்படியான சூழலில், இயற்கை வளத்தைக் காப்பதில் ராணுவ வீரர்களுக்கும் கடமை உண்டு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தலைமை (பொறுப்பு) நீதிபதி கோடீஸ்வர் சிங்.
அசாம் மாநில சட்ட சேவை ஆணையமும், அசாமிலிருந்து செயல்படும் பல்லுயிர்ப் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து சமீபத்தில் பொங்கைங்காவ் நகரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நீதிபதி கோடீஸ்வர் சிங் இயற்கையைப் பாதுகாப்பதில் ராணுவத்தினரின் கடமையைப் பற்றி விரிவாகப் பேசினார்.
தாங்கள் பணிபுரியும் பகுதியின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் பாதுகாப்புப் படையினரின் கடமை முடிந்துவிடாது; வன உயிர்களுக்கு எதிரான குற்றங்களை அவர்கள் புறந்தள்ளக் கூடாது என்று கூறிய அவர், “எல்லையில் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் சஷாத்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படையைச் சேர்ந்த ஒரு வீரருக்கு, எல்லையைக் காப்பதுதான் முக்கியமான பணி என்றாலும், நாட்டிலிருந்து விலைமதிப்பற்ற வன உயிர்களை அல்லது அவற்றின் பாகங்களைக் கடத்த நடக்கும் முயற்சிகளை அவர் கவனிக்கத் தவறக் கூடாது. ராணுவம், துணை ராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களுக்கும் இதே பொறுப்பு இருக்கிறது. வன உயிர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் வனத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் அவர்கள் உதவ வேண்டும்” என்றார்.
மேலும், இயற்கைச் சூழல், வனம், நீர்நிலைகள், வன உயிர்கள் ஆகியவற்றைக் காப்பது இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.