பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக நேபாளம் செல்கிறார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும், புத்தமதப் புனிதத் தலங்களைக் கொண்ட நேபாளத்தின் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அவரது பயணம் அமைகிறது.
புத்தர் பிறந்த இடம் எனக் கருதப்படும் லும்பினிக்கு, புத்த பூர்ணிமா தினத்தில் செல்லும் பிரதமர் மோடி, தனது பயணம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், ‘புத்த பூர்ணிமா தினத்தில், புத்த பெருமானின் கொள்கைகளை நாம் நினைவுகூருவோம். அவற்றைப் பூர்த்திசெய்யவும் உறுதிபூணுவோம். புத்த பெருமானின் சிந்தனைகள் நமது பூமியை மேலும் அமைதியானதாக, இணக்கமானதாக, நிலைத்திருக்கக்கூடியதாக ஆக்கக்கூடியவை’ என்று தெரிவித்திருக்கிறார்.
உத்தர பிரதேசத்தின் குஷிநகரிலிருந்து விமானம் மூலம் அவர் லும்பினிக்குச் செல்கிறார். மாயாதேவிக்குச் சென்று வழிபடவிருக்கும் அவர், புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்கிறார். பவுத்த மத கலாச்சார மற்றும் பாரம்பரிய மையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
லும்பினியில் பிறந்த புத்தர், குஷிநகரில் பரிநிர்வாண நிலையை அடைந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அங்கிருந்து நேரடியாக லும்பினிக்குப் பிரதமர் மோடி செல்வது தனிச்சிறப்பான பயணமாகக் கருதப்படுகிறது.