`இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து'– எச்சரிக்கும் சோனியா காந்தி!

By காமதேனு

“நாட்டில் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது” என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற இரண்டே ஆண்டுகள் உள்ள நிலையில், தேர்தலை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சி சார்பாகச் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்பூரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி தொடக்க உரையாற்றினார். இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் என 430க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாட்டில் நிலவிவரும் அரசியல், பொருளாதாரம், சமூக பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு செல்போனை எடுத்து வரக் காங்கிரஸ் தலைமை தடை விதித்துள்ளது. மேலும் அதிருப்தி தலைவர்களைச் சமாதானப் படுத்துவது மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட முடிவுகளை முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தலைமை பதவி அளிக்கலாம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்படலாம் என்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய சோனியா காந்தி, “தேசத் தலைவர்களைக் கொலை செய்தவர்கள் இன்று கொண்டாடப்படுகிறார்கள். ஜனநாயகத்திற்குக் குரல் கொடுப்போர் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டப்படுகிறார்கள். நாட்டில் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு மிக்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE