ஓராண்டில் பேரக்குழந்தை பெற்று தர மகனுக்கும் மருமகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் 5 கோடி இழப்பீடு பெற்றுதர வேண்டும் எனவும் மகனின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்.ஆர்.பிரசாத் என்பவரின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவில், “என்னுடைய மகன் விமான நிறுவனத்தில் விமானியாக உள்ளான். அவனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். மகனின் எதிர்காலம் கருதி கடந்த 2016-ம் ஆண்டு மகனுக்கு திருமணம் செய்து வைத்து தேனிலவுக்கு தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்தேன். தாய்லாந்து சென்றுவர ரூ.5 லட்சம் செலவு ஆனது. மகனை வளர்க்க ரூ.2 கோடி வரை செலவு செய்துள்ளேன். அன்றாட செலவுக்கு ரூ.20 லட்சம் வரை கொடுத்துள்ளேன். ரூ.65 லட்சம் மதிப்பிலான ஆடி கார் என பல வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்.
இப்படி வளர்த்த என் மகனை மருமகள் வீட்டார் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். குறிப்பாக மாத சம்பளம்கூட மருமகள் வீட்டாரே வாங்கி கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் என் மருமகள் என் மகன் மீதே பொய் வழக்குகளை தொடர ஆரம்பித்தார். அப்போது மகனுக்கு குழந்தை பிறந்தால் பிரச்சினை சரியாகிவிடும் என நினைத்தேன்.
அவர்களுக்கு 2016 டிசம்பர் 9-ம் தேதி திருமணமான நிலையில் இன்று வரை தனக்கு பேரக்குழந்தை இல்லை. இதில் நான் மிகுந்த மன வேதனை அடைந்து இருக்கிறேன். என் வம்சம் இதோடு முடிந்துவிடும் என்ற அச்சம் எனக்கு வந்துவிட்டது. அடுத்த ஒரு வருடத்தில் என் மகனும் மருமகளும் பேரக்குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் அல்லது எனக்கு இழப்பீடாக ரூ.5 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இந்த வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.