இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமானது தாஜ்மஹால். உலகத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது தவறாமல் சென்று பார்க்கும் முக்கியத் தலமாக தாஜ்மஹால் விளங்குகிறது. தனது மனைவி மும்தாஜின் மரணத்துக்குப் பின்னர் அவரது நினைவுச் சின்னமாக ஆக்ராவில் தாஜ்மஹாலை முகலாய மன்னர் ஷாஜஹான் கட்டினார். 1632-ல் தொடங்கிய அதன் கட்டுமானப் பணிகள் 1653-ல் நிறைவுபெற்றன.
பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுவருகிறது. 1982-ல் தாஜ்மஹாலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.
அதேசமயம், தாஜ்மஹால் குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய விஷயங்கள் சொல்லப்படுகின்றன. பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் அதன் 22 அறைகள் குறித்த ஊகங்கள் அவற்றில் முக்கியமானவை.
அந்த வகையில் சமீபத்தில் பாஜகவின் இளைஞர் ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், அந்த அறைகளில் இந்துக் கடவுளர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை உறுதிசெய்ய அவற்றைத் திறக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடுமாறும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் வழக்கு தொடர்ந்தார். உண்மை எதுவாக இருந்தாலும் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று இந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ‘இந்த விவகாரங்கள் நீதிமன்றத்துக்கு வெளியில் உள்ளவை. பல்வேறு முறைமைகள் மூலம்தான் அது செய்யப்பட வேண்டும். அதை வரலாற்றாசிரியர்களிடம் விட்டுவிட வேண்டும்’ என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.