குர் ஆன் கட்டளைகளை மீறி முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இச்சம்பவம் இன்னொரு உதாரணம் என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார். கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது.
கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.
உங்களுக்கு மத விதிகள் தெரியாதா எனவும் எச்சரித்தார். இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள் அதிகம் நிறைந்த, பெண்கள் அதிகம் வாழும் கேரளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சமூகத்தை பல தலைமுறைகளுக்கு கீழ் நோக்கி இழுப்பவர்களிடம் இருந்து மக்கள் விழிப்படைய வேண்டும்” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில், “திருக்குரானின் கட்டளைகளையும் மீறி, முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் தகுதியான விருதைப் பெறும்போது மேடையில் அவமானப்படுத்தப்பட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. மதகுருமார்கள் குரானின் கட்டளையை மீறியும், அரசியலமைப்பு சட்டத்தை மீறியும் முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவது, அவர்களின் ஆளுமையை நசுக்குவது ஆகியவற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்” என வேதனையோடு கூறியுள்ளார்.