ஐநா குறித்த தகவல்கள் உலகமெங்கும் வசிக்கும் இந்தி பேசும் மக்களைச் சென்றடையும் வகையில் 2018-ல் ஐநாவில் ஒரு புதிய திட்டத்தை இந்தியா தொடங்கிவைத்தது. இந்நிலையில், அந்தத் திட்டத்துக்காக 8 லட்சம் டாலர் தொகையை ஐநாவிடம் இந்தியா வழங்கியிருக்கிறது. ஐநாவுக்கான நிரந்தரத் துணைப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரா இதற்கான காசோலையை ஐநா பிரதிநிதியிடம் வழங்கினார்.
2018 முதல் ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்புத் துறைக்கு (டிஜிசி) இந்தியா கூடுதல் நிதி வழங்கிவருகிறது. அதன் மூலம் ஐநாவின் இணையதளம், அதன் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் ஆகியவற்றில் ஐநா செய்திகள் இந்தியில் வெளியிடப்படுகின்றன. இந்தியில் பிரத்யேகமாக ஐநாவுக்கான ஃபேஸ்புக் பக்கமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஐநா வானொலி மூலம் ஐநா குறித்த இந்தி மொழிச் செய்திகள் ஒலி வடிவிலும் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.