`கடலோரப் பகுதிகளில் உஷார் நிலையில் இருக்கவும்'- தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல்

By ரஜினி

இலங்கையில் நடைபெறும் வன்முறை வெடித்துள்ள நிலையில், தமிழகத்திற்குள் தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளும் கோத்தபய அரசுக்கு எதிராக தொடர் வன்முறை, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பலர் அகதிகளாக படகு மூலமாக இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து தப்பிய 50 கைதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் கண்காணிப்பை தீவிரபடுத்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், சந்தேகப்படும் படியான படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும் படியும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அகதிகள் மட்டுமின்றி பல தேசவிரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் இயக்கத்தத்தினர் மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து நிதி திரட்ட வாய்ப்பிருப்பதுடன், போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தல் கும்பல் தமிழகத்தில் நுழைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE