ஜனவரி 11-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நகரில் திஜாரா பாலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவர் பிறப்புறுப்பில் ரத்தக் காயத்துடன் மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. பெரும் அதிர்வை எழுப்பிய இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் இந்தச் சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு இது குறித்து ராஜஸ்தான் காவல் துறையினர் அளித்திருக்கும் அறிக்கை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்றைய தினம் அந்தச் சிறுமி தனது சொந்த கிராமத்திலிருந்து பேருந்தில் அல்வர் வந்ததாகவும், பேருந்திலிருந்து இறங்கியபோது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அச்சிறுமி மீது மோதி விபத்து நிகழ்ந்ததாகவும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பூபேந்திர சிங் (42), பின்னால் அமர்ந்துவந்த யூனுஸ் கான் (28) ஆகியோர் மீது வேகமாக வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையிலும் அந்தச் சிறுமிக்கு ஏற்பட்ட காயம் விபத்தால் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தடயவியல் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள 250 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, சாட்சிகளை விசாரித்து, ஆதாரங்களை வைத்து இதைக் கண்டறிந்ததாகவும் கூறியிருக்கின்றனர்.
எனினும், இந்த வழக்கில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் நிலவுகின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி தனது 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திலிருந்து தனியாக எப்படி வந்திருக்க முடியும் என்றும் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
போலீஸாரின் இந்த அறிக்கை மீண்டும் ராஜஸ்தானில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.