கனமழை: டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பெய்துவரும் கனமழை காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; 6 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த தூணும் விழுந்ததில் பயணிகளை ஏற்றி இறக்கும் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அங்கு அவர்கள் விரைந்தனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தூண் சரிந்து விழுந்து சேதமடைந்த காரில் இருந்து ஒருவரை மீட்டுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இடையூறுக்கு விமான நிலைய தரப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை தனிப்பட்ட முறையில் கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி மழை: கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக அங்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்த சூழலில் வியாழக்கிழமை அங்கு மழை பெய்தது. அங்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம் பதிவான மழை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் பருவமழை முன்கூட்டியே எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனங்கள் வியாழக்கிழமை தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் காலநிலை மாற்றம் காரணமாக அதீத வெப்பம் மற்றும் மழை என இரண்டையும் எதிர்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE