ஒரே நாளில் விபத்தில் உயிரிழப்பு: இருவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.68 லட்சம்!

By காமதேனு

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் சனிக்கிழமை (மே 7) தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதில், சாலை விபத்தில் கணவர்களை இழந்த இரு பெண்களுக்குத் தலா 36.95 லட்சம் ரூபாயும், 31.50 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டிருப்பது தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் மாவல் பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஆனந்த் எனும் நபர் உயிரிழந்தார். அதே நாளில், தானே நகரில் முகமது சலீம் அன்சாரி எனும் நபரும் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை நடந்த லோக் அதாலத்தில் ஆனந்தின் மனைவி சரிகாவுக்கு 36.95 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல் முகமது சலீம் அன்சாரியின் மனைவி ஷபானா அன்சாரிக்கு 31.50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இது குறித்த தகவலை தானே மாவட்ட சட்ட சேவை அதிகாரி ஒருவர் இன்று வெளியிட்டிருக்கிறார்.

2017 ஜூன் மாதம் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சேத்தன் எனும் நபரின் மனைவியான பாவனா ராஜ்புத்துக்கு இழப்பீடாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சாலை விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை அதுதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE