இரவு நேரத்தில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பிடிக்கச் சென்றனர். அப்போது, அவர்களை திடீரென சிறுத்தை தாக்கியது. தில்லாக செயல்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.
ஹரியானா மாநிலம், பானிபட் அருகே உள்ள பெஹ்ராம்பூர் கிராமத்தில் சிறுத்தை நடமாடுவதாக காவல்துறைக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினருடன் காவலர்கள் விரைந்து வந்த சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் சிறுத்தை அவர்களை தாக்கியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். இந்த தாக்குதலில் சனோலி காவல் அதிகாரி ஜக்ஜித் சிங், பானிபட் வனத்துறை ரேஞ்சர் வீரேந்தர் கஹ்லியான் மற்றும் வனத் துறையின் கால்நடை மருத்துவர் அசோக் காசா ஆகியோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் தற்போது நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பானிபட் போலீஸ் சூப்பிரண்டு ஷஷாங்க் குமார் சவான் சிறுத்தை தாக்குதலின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், மீட்புக் குழு உறுப்பினர்களை திடீரென சிறுத்தை பாய்ந்து தாக்குகிறது. தில்லாக செயல்பட்டு மீட்பு குழுவினர் சிறுத்தை பிடித்துள்ளனர்.
இந்த ட்வீட்டில் ஷஷாங்க் குமார் சவான், "சிறுத்தை தாக்குதலில் சில அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். இறுதியில் சிறுத்தை உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" என கூறியுள்ளார்.