‘எந்த ஒரு மனிதருக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது’ - இண்டிகோவை எச்சரித்த அமைச்சர்!

By காமதேனு

கடந்த சனிக்கிழமை (மே 7), ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகர விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் ஏற ஒரு மாற்றுத்திறனாளி குழந்தை, தாய், தந்தை அடங்கிய ஒரு குடும்பம் காத்திருந்தது. எனினும், அந்தக் குழந்தை சக பயணிகளின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி விமானத்தில் ஏற அக்குடும்பத்தினரை அனுமதிக்க மறுத்துவிட்டனர் இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள்.

இதையடுத்து, அங்கிருந்த சக பயணிகள் அக்குழந்தைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். எந்த விமான நிறுவனமும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் உள்ளிட்ட தகவல்களைத் தங்கள் செல்போன்கள் மூலம் இணையத்தில் தேடி, இண்டிகோ நிறுவன அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

சக பயணிகள் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் போராடியும் இண்டிகோ நிறுவனத்தினர் அக்குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கவில்லை. மாறாக, ‘ஓர் ஓட்டலில் அவர்களைத் தங்கவைத்து மறுநாள் வேறொரு விமானத்தில் அவர்களை அனுப்பிவைத்தோம்’ என அந்நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. இதுகுறித்து ஃபேஸ்புக்கில் விரிவான பதிவை எழுதியிருக்கும் சக பயணியான மனீஷா குப்தா, குழந்தையின் குடும்பத்தினர் இவ்விஷயத்தில் மிகவும் பொறுமையாக நடந்துகொண்டதாகவும் யாரிடமும் கடிந்துகூட பேசவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆனால், அனைத்துத் தரப்பினருக்குமான சேவையாக இருப்பதற்காகப் பெருமிதம் கொள்வதாகக் கூறியிருக்கும் இண்டிகோ நிறுவனம், மாற்றுத்திறனாளி குழந்தை விஷயத்தில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக எழுந்த விமர்சனங்களையும் புறக்கணித்துவிட்டது.

‘அந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை பீதியடைந்த நிலையில் இருந்ததால், பிற பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, தனது குடும்பத்தினருடன் விமானத்தில் ஏற அக்குழந்தை அனுமதிக்கப்படவில்லை. கடைசி நிமிடம் வரை இண்டிகோ நிறுவன அதிகாரி அக்குழந்தையைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை’ என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இத்தனைக்கும் அதே விமானத்தில் பயணிக்கவிருந்த மருத்துவர்கள் சிலர், அக்குழந்தைக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், இண்டிகோ நிறுவன அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் குறித்து சக பயணிகள் சமூகவலைதளங்களில் ஏராளமான பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வரை எட்டியிருக்கிறது.

இதையடுத்து, ‘இப்படியான நடத்தையைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. எந்த ஒரு மனிதருக்கும் இப்படியான நிலை ஏற்படக் கூடாது. இந்த விவகாரம் குறித்து நானே தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துகிறேன். விசாரணையைத் தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ட்வீட் செய்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE