முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியேறிய இளைஞர்: சொந்தக் குடும்பமே கொடூரத் தாக்குதல்

By காமதேனு

முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியேறிய வாலிபரை, அவரது சொந்தக் குடும்பத்தினரே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்கர் அலி(24) இவர் கேரளத்தில் உள்ள இஸ்லாமிய மையம் ஒன்றில் மதம் சார்ந்த 12 வருட படிப்பு பயின்றார். அங்கு படிப்பு முடிந்த கையோடு, முஸ்லிம் மதத்தில் இருந்தும் வெளியேறும் முடிவை எடுத்தார். மதம் சார்ந்த படிப்பைப் படித்துவிட்டு, முற்போக்கு சிந்தனையுடன் இயங்கத் தொடங்கிய அஸ்கர் அலியை கொல்லத்தில் நடக்கும் அவர்களது நிகழ்வுக்கு அமைப்பு ஒன்று பேச அழைத்தது. அங்கு பேசசெல்லக்கூடாது என அஸ்கர் அலியை அவரது குடும்பமும், உறவினர்களும் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி அஸ்கர் அலி செல்லவே, அவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் அஸ்கர் அலியைத் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் கொல்லத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு பேசச் செல்வதாகவும், பேசிவிட்டு வந்து காவல்நிலையத்தில் ஆஜராவதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதனால் அஸ்கர் அலி, கொல்லத்திற்கு செல்வதை தடுக்கமுயன்ற குடும்பத்தினரின் முதல்முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தில் சிலரும், பகுதிவாசிகளில் சிலரும் சேர்ந்து அஸ்கர் அலியைப் பின் தொடர்ந்து கொல்லத்திற்கே சென்றனர். கொல்லத்தில் அஸ்கர் அலி தங்கியிருந்த விடுதிக்குச் சென்றவர்கள் குடும்ப விசயம் குறித்து அவசரமாகப் பேசவேண்டும் என கொல்லம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அஸ்கரிடம் ரயிலில் தான் வந்ததாக கூறியவர்கள், கடற்கரையில் ஒரு இன்னோவா காரின் அருகில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் காரில் வேறு நபர்கள் இருப்பது அஸ்கர் அலிக்குத் தெரியவந்தது. அஸ்கர் அலியை காரில் ஏற வலுக்கட்டாயமாக தள்ளினர். அப்போது அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும் அஸ்கர் அலி புகார் கொடுத்துள்ளார். அவரது அழுகைச்சத்தம் கேட்டு கடற்கரையில் நின்றவர்கள் திரண்டதால் போலீஸாரும் வந்தனர். இதனால் அஸ்கர் அலி பெரியதாக்குதலில் இருந்து தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஸ்கர் அலி மேலும் கூறுகையில், “என்னை என் குடும்பத்தினரும், வேறுசிலரும் தாக்கியது தொடர்பாக கொல்லம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. மதக்கல்வி படிப்பிற்கு 8 முதல் 10 வயதுவரை உள்ள குழந்தைகள் சேர்கிறார்கள். 12 ஆண்டு படிப்பு அது. அவர்கள் அனுபவிக்கும் உளவியல் மற்றும் உடல்ரீதியான பிரச்சினைகள் குறித்து வெளியில் சொல்ல முடிவதில்லை. குடும்பத்தில் போய் சொன்னாலும், மதமே பிரதானமாக நம்பும் குடும்பங்கள் அதை உணர்ந்துகொள்வதில்லை. இதையெல்லாம் தான் கொல்லம் கூட்டத்தில் பேசினேன். இன்னும், இன்னும் பேசுவேன்” என்றார்.

வேறு என்ன பேசினார்?

கொல்லத்தில் நடந்த கூட்டத்தில் அஸ்கர் அலி, ‘மத வகுப்பறையில் ராணுவத்தில் சேரக்கூடாது என கற்றுத்தரப்படுகிறது. ராணுவத்தில் சேர்ந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டினர் மீது தாக்குதல் நடத்த வேண்டிவரும். அவர்கள் நம் மதத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை கொல்லக் கூடாது என போதிக்கப்பட்டது. உண்மையான பாசிசமே இஸ்லாம்தான்’ எனவும் பேசியிருக்கிறார் அஸ்கர் அலி. இதனிடையே கேரள சமூகவலைதளங்களில் அஸ்கர் அலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகளும் உலாவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE