ரூ.147 கோடி சிக்கிய விவகாரம்: சேகர் ரெட்டி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து

By காமதேனு

ரூ.147 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பணமதிப்பிழப்பு காலத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு காண்டிராக்டர் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 147 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், 34 கோடி ரூபாய்க்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சேகர் ரெட்டி

இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து, சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், மோசடியான வகையில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டத்துக்கு புறம்பாக வருமானம் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகள் கீழ் இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, மத்திய அமலாக்கத்துறையும், இந்த விவகாரம் தொடர்பாக, சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் அமலாக்க துறை சார்பில் பதிவு செய்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சேகர் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE