வெளிநாட்டுப் பாலியல் தொழில் கும்பலுடன் தொடர்பு: பாஜக பெண் கவுன்சிலரைக் கொன்றாரா கணவர்?

By காமதேனு

உத்தர பிரதேச பாஜக பெண் கவுன்சிலர் ஸ்வேதா சிங் கவுர் மர்ம மரணம் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வெளிநாட்டுப் பாலியல் தொழில் கும்பலுடன் தொடர்பில் இருந்த அவரது கணவர் தீபக் சிங் கவுர்தான் ஸ்வேதா சிங்கைக் கொலை செய்தார் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

உத்தர பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளாட்சி உறுப்பினரான ஸ்வேதா சிங் கவுர், கடந்த புதன்கிழமை (ஏப்.27) தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகின. குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. எனினும், தனது கணவரின் நடத்தை குறித்து தனது குடும்பத்தினரிடம் அவர் ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்த நிலையில், அவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெளிநாட்டு பாலியல் கும்பலின் தரகருடன் தீபக் சிங் பேசிய தொலைபேசி உரையாடல்களை ஸ்வேதா சிங் பதிவுசெய்திருந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர். அந்த ஒலிப்பதிவுகளும் தற்போது வெளியாகியிருக்கின்றன. அத்துடன் தீபக் சிங், அவரது பெற்றோர், அண்ணன் ஆகியோர் சேர்ந்து ஸ்வேதா சிங்கைக் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர்.

ரஷ்யா, மொராக்கோ மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பாலியல் தொழிலாளிகளுடன் தீபக் சிங்குக்குத் தொடர்பு இருந்ததும், அது தொடர்பாகத் தரகருடன் பேசியதும் அவரது தொலைபேசி உரையாடல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. தீபக் சிங் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகப் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாகக் கிடைத்திருக்கும் சான்றுகளின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருவதாகவும் போலீஸார் கூறியிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE